10,701 பேருக்கு அரசுப்பணி: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய தகவல்

  தினத்தந்தி
10,701 பேருக்கு அரசுப்பணி: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய தகவல்

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையிலிருந்த 30 தேர்வுகளின் தெரிவுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2024-ம் ஆண்டு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் செயல்பாடுகள்) சட்டத்தின் கீழ் 42 பொதுத்துறை நிறுவனங்கள், சட்டபூர்வ வாரியங்கள் மற்றும் சட்டபூர்வ ஆணையங்களில் உள்ள 1,406 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 661 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு (shortfall) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளனதேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக 2024-ம் ஆண்டு தெரிவுப் பணிகள் நிறைவுபெற்ற 30 தேர்வுகளில் தெரிவு பெற்ற தேர்வர்களின் பதிவெண்களுடன் கூடிய தெரிவுப் பட்டியல், கொள்குறி வகையில் நடைபெற்ற 25 தேர்வுகளுக்கான இறுதி விடைகள், விரிந்துரைக்கும் வகையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளின் (தொகுதி I, IA, II, மற்றும் IIA பணிகள்) தேர்வர்களுடைய விடைப் புத்தகங்கள் மற்றும் 27 தேர்வுகளில் தெரிவு செய்யப்படாத தேர்வர்களின் மதிப்பெண்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அறிவிக்கை வெளியிடப்படும் நாள், தேர்வு நடைபெறும் நாள் ஆகிய விவரங்களுடன் கூடிய 2024- ஆண்டிற்கான திருத்திய தேர்வுகளின் ஆண்டுத்திட்டம் வெளியிடப்பட்டு, அனைத்து அறிவிக்கைகளும் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்பட்டுள்ளன. மேலும், தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக டிசம்பர் 2024-ல் வெளியிடப்பட வேண்டிய 2025-ம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத்திட்டம், இரண்டு மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.2024-ம் ஆண்டு மதிப்பீட்டுப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் தொகுதி I, II, IIA, மற்றும் IV பணிகளின் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டுகளை விட விரைவாக வெளியிடப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி I பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 33 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- (தொகுதி II மற்றும் IIA பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 57 வேலை நாட்களுக்குள்ளும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்)-க்கான தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள்ளும் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IIA பணிகளின் முதன்மைத் தேர்விற்கான தேர்வுத் திட்டம் கொள்குறி வகையாக (objective type) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II பணிகள் மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகளில் சம்பள ஏற்ற முறை 17 முதல் 20 வரை உள்ள பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி IA மற்றும் VI பணிகளுக்கான தேர்வுத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும், தெரிவுப் பணிகளை விரைவுபடுத்த, தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப் படிப்பு / தொழிற்பயிற்சி தரம்) என மூன்று நிலைகளாக ஒருங்கிணைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளனதேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி II மற்றும் IIA பணிகளின் முதல்நிலை தேர்விற்கான பொதுத்தமிழ் பாடத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளின் தமிழ் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - தொகுதி I, II, IIA மற்றும் IV பணிகளுக்கான தேர்வுகளில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகள்/ஒதுக்கீடு செய்யப்பட்ட மதிப்பெண்களுடன் கூடிய பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அரசுத் துறைகளின் தேவைக்கேற்பவும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கவும், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகளில், 31 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் 34 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.தேர்வு நடத்தும் முறைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக, 1,49,971 தேர்வர்கள் விண்ணப்பித்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகளில் (நேர்முகத் தேர்வு பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள், பட்டயப் படிப்பு / தொழிற்பயிற்சி தரம்) 103 பாடத்தாள்களுக்கான தேர்வுகள் கணினி வழித் தேர்வாக நடத்தப்பட்டுள்ளன.தேர்வர்களின் நலன் கருதி, தெரிவு அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வின் அடுத்த நிலை தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வு முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் மாதம் தெரிவு அட்டவணையில் குறிப்பிடப்பட்டு, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் தொகுதி -I, II, IIA, மற்றும் IV பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) ஆகிய தேர்வுகளின் முடிவுகள், தெரிவு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட மாதத்தில் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளன.ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறையை எளிமைப்படுத்த, அரசு இ-சேவை மையங்கள் மூலம் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்ற நடைமுறை மாற்றியமைக்கப்பட்டு, தேர்வர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.தேர்வர்கள் எளிதாக பாடத்திட்டங்கள் தொடர்பான விவரங்களை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும் விதமாக, 120 பாடத்தாள்களுக்கான பாடத்திட்டங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வுத் திட்டங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு தேர்வு தொடர்பான துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கும் பொருட்டு தேர்விற்கான அறிவிக்கையின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டு, வெவ்வேறு பதவிகளுக்கான தகுதி நிபந்தனைகள், தேர்வு நடைமுறை, இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை, சிறப்பு பிரிவினருக்கான சலுகைகள் மற்றும் இடஒதுக்கீடு, சான்றிதழ்களின் படிவங்கள், பாடத்திட்டம், மற்றும் தேர்வு எழுதும்போது தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வர்கள் தேர்வு தொடர்பான செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளம் மற்றும் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டு, தகவல்கள் தேர்வர்களுக்கு விரைவாக வழங்கப்பட்டு வருகிறதுஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை