மணிப்பூர் கிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்
இம்பால்,மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கடங்பண்ட் கிராமத்தில் அதிகாலை 1 மணியளவில் பயங்கரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை கொண்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படையினர் மற்றும் கிராமவாசிகள் பதில் தாக்குதல் நடத்தி சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டாலும், அந்த கிராமத்தின் குடிசைவீடுகளில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் காங்போக்வி மாவட்டத்தின் மலைகளில் பதுங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.