நாளை தொடங்குகிறது 'ஜெய் பாபு, ஜெய் பீம்' பேரணி - காங்கிரஸ் அறிவிப்பு

  தினத்தந்தி
நாளை தொடங்குகிறது ஜெய் பாபு, ஜெய் பீம் பேரணி  காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி,சுதந்திரத்துக்காக பாடுபட்ட காந்தியின் புகழ் மற்றும் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை நினைவு கூறும் வகையிலும், நாடு முழுவதும் மத்திய, மாவட்ட, மாநில அளவில் 'ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்' என்ற கோஷத்துடன் பேரணிகள்,கூட்டங்கள் நடத்தப்படும் என்று கடந்த மாதம் 26ம் தேதி பெலகாவியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.அதே நகரில், 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்' என்ற பிரசார பேரணி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கடந்த 26-ந் தேதி இரவு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டது. அதனால், 27-ந் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பேரணி ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிடையே, 7 நாள் துக்கம் முடிவடையும் நிலையில், நாளை (03-01-2025) 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்' பிரசார பேரணி தொடங்கப்படுகிறது.இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது வைத்துள்ள ஆழ்ந்த மரியாதை காரணமாக, காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானத்தை அமல்படுத்துவது ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் இல்லை என்பதை உணர நீண்ட காலமாகும். இருப்பினும், 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்' பிரசார பேரணி, 3-ந் தேதி தொடங்குகிறது. ஜனவரி 26-ந் தேதி, சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த மோவ் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்துடன் இந்த பிரசாரம் முடிவடையும். அந்த நாள், இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது, குடியரசு தினம் ஆகியவற்றின் 75-வது ஆண்டு நிறைவுநாள் ஆகும். 3-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை, நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டம், மாவட்டம் மற்றும் மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறும்" என்று அவர் கூறினார்.

மூலக்கதை