அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அடுத்த வாரம் இந்தியா வருகை
வாஷிங்டன்,செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறைகளில் 'முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த இந்தியா-அமெரிக்க முன்முயற்சி'(iCET) மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமான தொழில்நுட்ப துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையே கூடுதல் ஒத்துழைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்நிலையில், இத்திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் அடுத்த வார தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அமெரிக்க அதிபராக வரும் 20-ந்தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், ஜேக் சல்லிவனின் வருகை ஜோ பைடன் அரசாங்கம் சார்பில் நிகழும் கடைசி உயர்மட்ட இந்திய பயணமாக பார்க்கப்படுகிறது. இதன்படி ஜேக் சல்லிவன் வரும் 6-ந்தேதி டெல்லிக்கு வர உள்ளதாகவும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் 6 நாள் அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.