நகைக்கடன் வழங்கும் நிறுவனத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கும்பல்: 30 கிலோ தங்கம் கொள்ளை
புவனேஷ்வர்,ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் புத்தராஜா பகுதியில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை நேற்று காலை 10 மணிக்கு ஊழியர்கள் திறந்துள்ளனர்.அப்போது, தலையில் ஹெல்மெட் அணிந்து திடீரென துப்பாக்கியுடன் அந்த நிறுவனத்திற்குள் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. பின்னர், நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய அந்த கும்பல் அவர்களை கயிறு கொண்டு கட்டியுள்ளது.இதனை தொடர்ந்து நிறுவனத்தில் இருந்த 30 கிலோ தங்கம், 4 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்து தப்பிச்சென்றது.இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்நிறுவன ஊழியர்கள் போலீசில் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நகைக்கடன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 30 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.