சிட்னி டெஸ்ட்: போலன்ட் அசத்தல் பந்துவீச்சு.. 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்

  தினத்தந்தி
சிட்னி டெஸ்ட்: போலன்ட் அசத்தல் பந்துவீச்சு.. 2வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்

சிட்னி, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - ராகுல் களமிறங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே 4 பவுண்டரிகள் விளாசி ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் இன்னிங்சை தொடங்கினார். இருப்பினும் நம்பிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கே.எல். ராகுல் 13 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் போலன்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கில் 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்த தொடரின் கடைசி இன்னிங்சிலாவது ரன் குவிப்பாரா? என்று எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார். 6 ரன்களில் போலன்ட் வீசிய அதே அவுட் சைட் ஆப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அதிருப்தியுடன் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பண்ட் விக்கெட் சரிவை கண்டு கலங்காமல் தன்னுடைய வழியில் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா ஒருமுனையில் நிதானத்தை கடைபிடிக்க, பண்ட் ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஸ்டார்க்கின் ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்த அவர் 61 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ரன்களில் அவுட்டானார். 2-வது நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களுடன் தடுமாறி வருகிறது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஸ்காட் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்திய அணி இதுவரை 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

மூலக்கதை