பும்ராவுடன் மோதல்: கான்ஸ்டாசுக்கு அறிவுரை வழங்கிய ஆஸி.முன்னாள் வீரர்

  தினத்தந்தி
பும்ராவுடன் மோதல்: கான்ஸ்டாசுக்கு அறிவுரை வழங்கிய ஆஸி.முன்னாள் வீரர்

சிட்னி, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதி ஓவரை இந்திய கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் ஒரு பந்தை வீசுவதற்கு சில அடி ஓடி வந்தபோது, பேட்ஸ்மேன் கவாஜா இன்னும் தயாராகவில்லை என நடுவர் சிக்னல் காட்டினார். இதனால் அதிருப்தியடைந்த பும்ரா என்னப்பா இது.... என்பது போல் இரு கைகளையும் விரித்தபடி கேட்க, எதிர்முனையில் நின்ற இளம் பேட்ஸ்மேன் கான்ஸ்டாஸ் அவரை ஏதோ சொல்லி சீண்டினார். இதனால் கோபமடைந்த பும்ரா பதிலுக்கு வார்த்தைகளை உதிர்த்தார். பிறகு நடுவர் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடைசி பந்தில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் பும்ரா நேராக கான்ஸ்டாஸ் அருகே ஓடி வந்து ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.இந்நிலையில் பும்ரா போன்ற தரமான பவுலரிடம் வெறும் 19 வயதில் இப்படி தேவையின்றி சீண்டல்களை வைத்துக் கொள்ளக் கூடாது என சாம் கான்ஸ்டாசுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி அறிவுரை வழங்கியுள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "சாம் கான்ஸ்டாஸ் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவருடைய தன்னம்பிக்கை மற்றும் இளமை ஆர்வம் குறையாமல் ஆஸ்திரேலிய அணியினர் அவருக்கு வழிகாட்டுதல்களை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை