மணிப்பூர் வன்முறை; பாதுகாப்பு சூழல் பற்றி மாநில உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

  தினத்தந்தி
மணிப்பூர் வன்முறை; பாதுகாப்பு சூழல் பற்றி மாநில உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

இம்பால்,மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என்ற இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது.இந்நிலையில், சமீபத்தில் இம்பால் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில், பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து, பலர் வீடுகளை விட்டு, வேறு இடங்களுக்கு தப்பியோடும் நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததுடன், சட்டம் மற்றும் ஒழுங்கும் சீர்கெட்டது.இந்நிலையில், மணிப்பூருக்கு புதிதாக கவர்னர் நியமிக்கப்பட்டார். முன்னாள் மத்திய உள்துறை செயலாளரா அஜய் குமார் பல்லா நேற்று முறைப்படி மணிப்பூரின் 19-வது கவர்னராக பொறுப்பேற்று கொண்டார்.இந்த சூழலில், பாதுகாப்பு தொடர்பாக அவர் மறுஆய்வு கூட்டம் ஒன்றை இன்று நடத்தினார். இதுபற்றி கவர்னர் மாளிகை இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தியில், இம்பாலில் உள்ள கவர்னர் மாளிகையில் மணிப்பூர் கவர்னர் பல்லா, பாதுகாப்பு தொடர்புடைய கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினார்.இதில், சட்டம் மற்றும் ஒழுங்கின் நடப்பு சூழலை பற்றி ஆய்வு மேற்கொண்டார். மணிப்பூர் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு தொடர்பான விசயங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மறுஆய்வு செய்ததுடன், எல்லை பகுதிகளிலும் கவனம் செலுத்தினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.மூத்த போலீசார், சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப்., அசாம் ரைபிள்ஸ் அதிகாரிகள் அடங்கிய கூட்டத்திற்கு தலைமையேற்று ஆலோசனை மேற்கொண்டார். விரிவான பாதுகாப்பு சூழல் பற்றியும் மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது என அதுபற்றிய அறிவிப்பு தெரிவிக்கின்றது.கூட்டத்தில் பங்கேற்ற மணிப்பூர் அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங், மணிப்பூர் டி.ஜி.பி. ராஜீவ் சிங் உள்ளிட்டோரிடம் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி கேட்டு கொண்ட கவர்னர், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க நிர்வாகத்துடன் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும்படி ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

மூலக்கதை