திருவண்ணாமலையில் தமிழ் பாரம்பரிய உடையணிந்து அமெரிக்க பெண்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை,திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி அவ்வப்போது வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்ய அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர். அப்போது அந்த பெண்கள் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டுப்புடவை அணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோவிலில் ராஜகோபுரம் முன்பு அமர்ந்து 'ஓம் நமசிவாய' என்ற பஜனையில் ஈடுபட்டனர். மேலும் சிலர் பாதாள லிங்கம் சன்னதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கல்தூண்களில் செதுக்கப்பட்டு இருந்த சிற்பங்களைக் கண்டு ஆச்சரியத்துடன் வியந்து பார்வையிட்டனர். அமெரிக்க பக்தர்கள் பட்டுப் புடவை அணிந்து வந்திருந்ததை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.