திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: 15-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

  தினத்தந்தி
திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: 15ந்தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை,தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளை கொண்டு, சீர் இளமையோடு விளங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் திருவள்ளுவர் விருது-செந்தமிழ் செம்மல் மு.படிக்கராமுவுக்கும், அண்ணா விருது- எல்.கணேசனுக்கும், மகாகவி பாரதியார் விருது- கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது- பொன்.செல்வகணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- வே.மு.பொதியவெற்பனுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட உள்ளார்கள். இதேபோல், பெரியார் விருது- விடுதலை ராஜேந்திரனுக்கும், அம்பேத்கர் விருது- து.ரவிக்குமார் எம்.பி.க்கும் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு விருதுத்தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட இருக்கிறார்கள். கலைஞர் விருதுக்கு முத்து வாவாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விருது தொகையாக ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட உள்ளார். இந்த விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் வழங்க இருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை