கோவிலுக்குள் நடராஜர் சிலையை வைத்து சென்ற மர்ம நபர்கள்
நாகப்பட்டினம், நாகை மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தரகுஜாம்பிகை உடனாகிய அட்சயலிங்க சாமி கோவில் உள்ளது. இங்கு பணிபுரியும் மெய்க்காவலர் சண்முகம் கோவிலுக்குள் உள்ள அனைத்து சன்னதிகளிலும் தினமும் காலை, மாலை நேரத்தில் விளக்கு ஏற்றுவது வழக்கம். நேற்று மாலை கோவில் உள்பிரகாரத்தில் தல விருட்சம் அருகே உள்ள விஸ்வநாதசாமி சன்னதியில் விளக்கேற்றி உள்ளார். அப்போது சாமி அருகே ஒரு நடராஜர் சிலையும், துணிப்பையும் தனித்தனியாக இருந்தன. இதுதொடர்பாக சண்முகம் கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார்.இதை அறிந்த வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) பத்மநாபன், கிராம நிர்வாக அதிகாரி ரவீந்திரபாண்டியன் மற்றும் போலீசார் அங்கு சென்று சிலையை பார்வையிட்டனர். இதையடுத்து சிலை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உலோகத்தால் ஆன அந்த நடராஜர் சிலை மிகவும் பழமையான சிலை போல் உள்ளது. இந்த சிலையை கோவிலுக்குள் வைத்து சென்ற மர்ம நபர்கள் யார்? வேறு கோவிலில் இருந்து கடத்தி வரப்பட்டதா? என்பது தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.