விஜய் ஹசாரே டிராபி; சத்தீஷ்காரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய தமிழகம்

  தினத்தந்தி
விஜய் ஹசாரே டிராபி; சத்தீஷ்காரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய தமிழகம்

விஜயநகரம், விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தமிழகம் - சத்தீஷ்கார் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சத்தீஷ்கார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 301 ரன்கள் குவித்தது. தமிழகம் தரப்பில் இந்திரஜித் 75 ரன், விஜய் சங்கர் 71 ரன் எடுத்தனர். சத்தீஷ்கார் தரப்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஷ்கார் அணி களம் புகுந்தது. சத்தீஷ்கார் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பூபன் லால்வானி, அசுதோஷ் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது பிரிந்தது. இதில் அசுதோஷ் சிங் 71 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் புகுந்த சன்சஞ்சீத் தேசாய் 2 ரன்னிலும், அமந்தீப் கரே 4 ரன்னிலும், பிரதீக் யாதவ் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடிய பூபன் லால்வானி அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.இதில் ஏக்நாத் கெர்கர் 25 ரன், ககன்தீப் சிங் 33 ரன், சுபம் அகர்வால் 7 ரன், ரவி கிரண் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் சத்தீஷ்கார் அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தமிழகம் 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகம் தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 6 லீக் ஆட்டங்களில் (4 வெற்றி, 1 தோல்வி, 1 முடிவில்லை) 18 புள்ளிகளை பெற்று தனது பிரிவில் 2வது அணியாக அடுத்த சுற்றுக்கு (நாக் அவுட் சுற்றுக்கு) முன்னேறியது.

மூலக்கதை