சட்டசபையில் உரையாற்றாமல் புறப்பட்டுச் சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி
சென்னை, ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சற்றுமுன் சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிலையில் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார். உரையாற்றாமல் சட்டசபை கூட்டத்தொடரை கவர்னர் ஆர்.என்.ரவி புறக்கணித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.