ஓய்வு முடிவு உங்கள் கையில்தான் உள்ளது... ஆனால்.. - ரோகித் சர்மாவை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்
மும்பை, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவிற்கு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் அவரது கெரியரில் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டை தவற விட்ட அவர், அதற்கடுத்த 2, 3 மற்றும் 4-வது போட்டிகளில் கேப்டனாக களமிறங்கினார். இருப்பினும் அந்த போட்டிகளில் அவரது தலைமையில் விளையாடிய இந்திய அணி 2 மற்றும் 4 -வது போட்டிகளில் தோல்வி கண்டது. மழை காரணமாக 3-வது டெஸ்ட் சமனில் முடிந்தது.இதனையடுத்து சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி போட்டியில் தானாகவே அணியிலிருந்து வெளியேறினார். இதனால் இந்த தொடர் முடிந்தவுடன் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் நிலவின. ஆனால் தான் இப்போதைக்கு ஓய்வை அறிவிக்கும் எந்த ஒரு முடிவையும் எடுக்கப்போவது இல்லை, கடைசி போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன் என்று ரோகித் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ஓய்வு முடிவு உங்கள் கையில்தான் உள்ளது. ஆனால் அணியில் இடம்பெற வேண்டுமா? இல்லையா? என்பது தேர்வுக்குழுவினரின் கையில்தான் உள்ளது என்று ரோகித் சர்மாவை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அதாவது ரோகித் சர்மா தற்போதைய இருக்கும் நிலையில் அவரது மோசமான பேட்டிங் பார்ம் வெளிப்படையாக தெரிகிறது. ஓய்வு அறிவிப்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட முடிவுதான். அந்த வகையில் ரோகித்தின் ஓய்வு முடிவு என்பது அவரது கையில்தான் உள்ளது. ஆனால் இந்திய அணியில் அவர் விளையாட வேண்டுமா? இல்லையா? என்பது தேர்வுக்குழுவினரின் கையில்தான் உள்ளது.ஏனெனில் கடைசியாக நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அவர் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே எதிர் வரும் டெஸ்ட் தொடர்களில் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பதை தேர்வுக்குழுவினர்தான் முடிவு செய்வார்கள்" என்று கூறியுள்ளார்.