பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத்தொகை
சென்னை, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு மொத்தமுள்ள 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்து விட்டது. இந்த தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் திடீர் அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்கிடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10-ந்தேதியே ரூ.1,000 வரவு வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் இந்த மாதம் வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11-ந்தேதி மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. 13-ந்தேதி ஒரு நாள் மட்டுமே உள்ளது. அது பொங்கலுக்கு முந்தைய தினம். எனவே தமிழக அரசு, மகளிர் உரிமைத்தொகையை 10-ந்தேதி வழங்கி விடலாம் என முடிவு எடுத்துள்ளது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறுபவர்களுக்கு, இந்த மாதம் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 பணம் வரவு வைக்கப்படுகிறது.