கொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி

  தினத்தந்தி
கொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி

பாட்னா,பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தில் திவாரியா கிராமத்தில் வசித்து வந்தவர் நாதுனி பால் (வயது 50). 2008-ம் ஆண்டு செப்டம்பரில் இவர் காணாமல் போய் விட்டார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின்னர், அவருடைய குடும்பத்தினர் போலீசிடம் சென்று, 4 உறவினர்கள் பாலின் நிலங்களை அபகரித்து கொண்டு, அவரை படுகொலை செய்து விட்டனர் என குற்றச்சாட்டாக கூறினர்.இதனால் கொலை வழக்கு பதிவானது. அந்த தருணத்தில் பாலின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தில் பாலின் தந்தை வழி உறவினர்களான ரதி பால், விம்லேஷ் பால், பகவான் பால் மற்றும் சத்யேந்திர பால் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருகிறது.ஆனால், உண்மையில் வீட்டை விட்டு வெளியேறிய நாதுனி பால் பல ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் தலைமறைவாக வாழ்ந்து வந்திருக்கிறார். சந்தேகத்தின் பேரில் அவரை பற்றி கிராமத்தினர் போலீசில் கூறியுள்ளனர். இதுபற்றிய விசாரணையில், அவர் பீகார் காவல் நிலையத்தில், இறந்த நபர் என பதிவு செய்யப்பட்ட நாதுனி என்பது தெரிய வந்துள்ளது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.சிறு வயதில் அவருடைய பெற்றோர் உயிரிழந்து விட்டனர். நீண்ட நாட்களுக்கு முன்பு மனைவியும் அவரை விட்டு சென்று விட்டார். பீகாரில் உள்ள வீட்டுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டன என அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.முறையான ஆய்வுக்கு பின்னர், போலீசார் அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். 17 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில், கொலையானவர் திரும்பி வந்துள்ளது கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்த கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பகவான் பால் கூறும்போது, நாங்கள் சிறையில் கழித்த மற்றும் கோர்ட்டுக்கு அலைந்து, திரிந்த விலைமதிப்பில்லா ஆண்டுகளை யார் எங்களுக்கு திருப்பி தருவார்கள்? என கேட்டுள்ளார்.

மூலக்கதை