ஏமனில் அமெரிக்கா அதிரடி வான்வழி தாக்குதல்
சனா,இஸ்ரேல், காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழு இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை மீட்க இஸ்ரேல் முயற்சித்து வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், போரை நிறுத்தவும் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல், அமெரிக்கா அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இந்நிலையில், ஏமனில் அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் தலைநகர் சனா, அம்ரன் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.