பாஜகவுடன் எப்படி போராடுவது என்பதை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்ய வேண்டும்: உமர் அப்துல்லா

  தினத்தந்தி
பாஜகவுடன் எப்படி போராடுவது என்பதை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்ய வேண்டும்: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்,70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வரவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் எப்படி போராடுவது என்பதை ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், டெல்லி தேர்தல் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் டெல்லி சட்டசபை தேர்தலுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. டெல்லியில் முந்தைய இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்த முறை தேர்தலில் டெல்லி மக்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்று நாம் காத்திருக்க வேண்டும் என்றார்.இந்தியா கூட்டணியை பொறுத்தவரை, தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மட்டும் அல்ல, நாட்டை வலுப்படுத்தவும், நம் நாட்டிலிருந்து இந்த வெறுப்பை அகற்றவும் இந்த கூட்டணி உள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே என்று நினைப்பவர்கள், இந்த தவறான எண்ணத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை