தமிழக முன்னேற்றத்திற்கு திமுக அரசுதான் தடையாக உள்ளது: எச்.ராஜா
விழுப்புரம்,விழுப்புரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது. நாங்கள் மக்கள் பிரச்சினைக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.கவர்னர் நிகழ்ச்சி நடக்கும்போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபு. இதை செய்யத்தவறிய அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள். கவர்னர் நிகழ்ச்சியில் தேசியத்தையும், தேசத்தையும் அவமானப்படுத்துவதுபோல் நடந்துள்ளனர். மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். தேசியம் வருவதை எதிர்ப்பதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறேன். திமுக அரசு மிக மோசமாக செயல்படுகிறது. இதற்கு காவல்துறை, துணைபோகாமல் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். திமுக அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடன் வாங்கியது தவிர வேறு ஏதும் செய்யவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் கோடி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறியாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.