வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்: எல் அண்ட் டி நிறுவன தலைவர் கருத்தால் சர்ச்சை
மும்பை,உலகின் பல்வேறு நாடுகள் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்பு முன்வைத்தார். இவரின் கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்த நிலையில், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது, "வீட்டில் அமர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசினார். எல் அண்ட் டி நிறுவன தலைவரின் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு பலரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.