இந்திய தேர்தல் முடிவு குறித்த மார்க் ஜூக்கர்பெர்க் கருத்துக்கு, அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு
சென்னை, மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசும்போது, 'கடந்த ஆண்டு தேர்தல்களின் ஆண்டாக இருந்தது. அப்போது, இந்தியா உள்பட உலகம் முழுவதும் தேர்தல்கள் நடைபெற்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல், மக்களிடம் எதிர்ப்புகளை பெற்ற ஆளும் கட்சிகள், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன' என்று கருத்து தெரிவித்திருந்தார்.மார்க் ஜூக்கர்பெர்க்கின் இந்த கருத்துக்கு, மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் 'எக்ஸ்'சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:- 2024 தேர்தல்களில், இந்தியா உட்பட பெரும்பாலான அரசுகள் கொரோனாவுக்கு பிந்தைய தேர்தலில் தோல்வியடைந்தன என்ற ஜுக்கர்பெர்க்கின் கருத்து உண்மையில் தவறானது. 80 கோடி பேருக்கு இலவச உணவு, இலவச தடுப்பூசிகள் மற்றும் கொரோனா காலத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவி, வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியாவை வழிநடத்துவது வரை, பிரதமர் மோடியின் 3-வது பதவிக்கால வெற்றி, நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.