டெல்லி முதல்-மந்திரி அதிஷி வேட்பு மனு தாக்கல்
புதுடெல்லி,70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. இதில், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. 4-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில், அதன் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் தீவிர பணியாற்றும்படி கட்சி தொண்டர்களை அறிவுறுத்தி உள்ளார்.டெல்லியில் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, இந்த முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பிலும் உள்ளது.டெல்லியில் கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் அதிஷி போட்டியிடுகிறார். அவர், டெல்லியிலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு பதிவு பிப்ரவரி 5-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதியும் நடைபெறும்.