எஸ்.ஏ.20 ஓவர் லீக்: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்திய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
டர்பன்,ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. ஜோபர்க் தரப்பில் அதிகபட்சமாக லியூஸ் டு ப்ளூய் 38 ரன்கள் எடுத்தார். டர்பன் அணி தரப்பில் சுப்ரயென், கிறிஸ் வோக்ஸ், மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.தொடர்ந்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினர், சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் டர்பன் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 141 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 28 ரன் வித்தியாசத்தில் ஜோபர்க் அணி வெற்றி பெற்றது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டி காக் 55 ரன்னும், க்ளாசென் 29 ரன்னும் எடுத்தனர். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜெரால்டு கோட்ஸி, டொனோவன் பெர்ரேரியா, தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.