சாம்பியன்ஸ் டிராபி: பும்ராவுக்கு பதிலாக அந்த அனுபவ வீரரை அணியில் சேர்க்கலாம் - ஸ்ரீகாந்த்
சென்னை, 8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க கடந்த 12-ம் தேக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருந்தது. ஆனால், இந்திய அணியை அறிவிக்க ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது.இதனிடையே இந்த தொடருக்கான லீக் ஆட்டங்களில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆஸ்திரேலிய தொடரின்போது பும்ராவுக்கு முதுகில் வீக்கம் ஏற்பட்டது. இந்த வீக்கம் குணமாக மார்ச் முதல் வாரம் ஆகும் என கூறப்படுகிறது. அதனால் அவர் லீக் ஆட்டங்களில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.இந்நிலையில் ஒருவேளை பும்ரா இந்த தொடரில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமாரை கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இன்றளவும் புவனேஸ்வர் குமாரால் இரண்டு புறமும் பந்தினை ஸ்விங் செய்து வீச முடியும். 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின்போது அவர் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரை இந்திய அணி தற்போது மறந்தே விட்டது. என்னை பொருத்தவரை பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க முடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக புவனேஸ்வர் குமாரை கொண்டு வந்தால் அது அணிக்கு நல்லதாக இருக்கும்" என்று கூறினார்.