சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர், இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின் போது அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே என்கவுன்டர் நடைபெறுகிறது.இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே காலை 9 மணியில் இருந்து கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வந்தது. முன்னதாக பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு இப்பகுதியில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.இந்த நடவடிக்கையில் மூன்று மாவட்டங்களில் உள்ள மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி), சிஆர்பிஎப்-இன் உயரடுக்கு போர் பிரிவின் ஐந்து பட்டாலியன்கள், கோப்ரா (கமாண்டோ பட்டாலியன் பார் ரெசலூட் ஆக்ஷன்) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) 229வது பட்டாலியன் ஆகியவை ஈடுபட்டன.இந்த மாதத்தில் பிஜாப்பூரில் நடக்கும் இரண்டாவது பெரிய என்கவுன்டர் சம்பவம் இதுவாகும். கடந்த ஜனவரி 12ம் தேதி, மாவட்டத்தின் மட்டேட் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து நக்சலைட்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.