கர்நாடகாவில் மேலும் ஒரு வங்கி கொள்ளை சம்பவம் - சுமார் ஒரு கிலோ தங்கம் மற்றும் பணம் திருட்டு
பெங்களூரு,கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் நேற்று வங்கியின் முன்பு பட்டப்பகலில் 2 மர்ம நபர்கள் வங்கி ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஒரு நபர் உயிரிழந்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், கர்நாடகாவில் மேலும் ஒரு வங்கி கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. மங்களூரு அருகே உள்ள தனியார் வங்கியில் இன்று பகல் 11.30 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாகவும், அந்த சமயத்தில் சுமார் 5 ஊழியர்கள் மட்டுமே வங்கியில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு நிற காரில், முகமூடி அணிந்து வந்த 5 மர்ம நபர்கள் வங்கிக்குள் கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. அவர்கள் வந்த காரிலேயே மீண்டும் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் அடுத்தடுத்து வங்கி கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.