திடீரென்று பேட்டிங்கில் அசத்த காரணம் என்ன..? கருண் நாயர் விளக்கம்

  தினத்தந்தி
திடீரென்று பேட்டிங்கில் அசத்த காரணம் என்ன..? கருண் நாயர் விளக்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடிக்க கருண் நாயர் கடுமையாக போராடி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் அதற்கடுத்த போட்டிகளில் சொதப்பியதால் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பின் அணியில் இடம் கிடைக்க போராடி வருகிறார்.தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், மீண்டும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 சதங்கள் உட்பட 752 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் கனவு இன்னும் கலையவில்லை என்று கருண் நாயர் தெரிவித்துள்ளார். கடினமாக உழைத்து வந்ததே தற்போது திடீரென அசத்தலாக விளையாட காரணம் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "எப்போதும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே கனவு. எனவே அந்த கனவு இன்னும் உயிருடன் இருக்கிறது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே திடீரென பேட்டிங்கில் அசத்த ஒரே காரணம். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய ஒரே இலக்கு. இது என்னுடைய 3வது கம்பேக் என்று நினைக்கிறேன். இப்போது செய்வதை நான் தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் குவிக்க வேண்டும். அது மட்டுமே என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீண்டும் இந்திய அணிக்காக தேர்வாகும் வரை அது கனவாகவே இருக்கும். ஒரு நேரத்தில் ஒரு இன்னிங்சில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். எதையும் நான் வித்தியாசமாக செய்யவில்லை. எனவே இதில் ரகசியம் எதுவுமில்லை. இத்தனை வருடங்களாக வெளிப்படுத்திய கடினமான உழைப்பு தற்போது ஒன்றாக வருகிறது என்று நினைக்கிறேன். என்னுடைய கெரியர் முடிந்ததாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நாம் புதிதாக ஜீரோவில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். இப்படித்தான் சில வருடங்களாக வாழ்க்கை செல்கிறது" என்று கூறினார்.

மூலக்கதை