திண்டிவனத்தில் அமையவுள்ள டாபர் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி
திண்டிவனம், திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் அமைய உள்ள டாபர் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறு உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது. 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவவுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 1,36,585 சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் தேன், ஓடோ டெல், டாபர் ரெட், ரோஸ் வாட்டர் உள்ளிட் பொருட்களை தயாரிக்க டாபர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.