விஜய்க்கு அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை: பதிலளித்த தவெக பொருளாளர்
சென்னை, முன்னாள் மத்திய மந்திரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செல்வப்பெருந்தகையின் அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட்ராமன், "அதற்கெல்லாம் நிறைய தூரங்கள் இருக்கிறது, அப்போது அதைப்பற்றி பேசலாம்" என பதிலளித்துள்ளார்.