இந்தியா, ஆஸ்திரேலியா அல்ல...சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்த அணிக்குதான் வாய்ப்பு அதிகம் - சுனில் கவாஸ்கர்
மும்பை,8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், இந்த தொடரில் கடினமான அணி குறித்தும், சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ள அணி குறித்தும் சுனில் கவாஸ்கர் சில கருத்துகளை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது, சொந்த மண்ணில் எந்த அணியும் வீழ்த்துவது என்பது எளிதான காரியம் அல்ல. இதனால் பாகிஸ்தான் அணிக்கு பேவரைட் (சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணி) என்கிற பட்டம் கொடுக்கப்பட வேண்டும். 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.ஆனால், அதற்கு முன்பாக இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே வரவிருக்கும் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணிதான் முன்னுரிமை பெறும் என தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.