சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணி தேர்வு சரியில்லை - காரணத்துடன் விளக்கிய முன்னாள் வீரர்
மும்பை,8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் பிரதான வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் கழற்றி விடப்பட்டு அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி துபாயில் விளையாடுவதற்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்படவில்லை என முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கூறியுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக்கோப்பை போல தற்போதைய அணியில் தேவையின்றி 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியை பார்க்கும்போது ஆல் ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 தரமான ஆல் ரவுண்டர்கள் உள்ளார்கள். இந்த அணி கடினமான சூழ்நிலைகளில் அசத்தக்கூடிய திறனை கொண்டுள்ளது. இருப்பினும் நான் இந்திய அணியை தேர்வு செய்ய வேண்டிய நிலை வந்தால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் 3 ஸ்பின்னர்களை தேர்வு செய்வேன். கண்டிப்பாக என்னுடைய அணியில் சிராஜ் இருப்பார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு நாம் 4 ஸ்பின்னர்களை அழைத்துச் சென்றோம். ஆனால் அங்கே சஹாலுக்கு கடைசி வரை வாய்ப்பு கொடுக்கவில்லை. துபாய் சூழ்நிலைகளை பார்த்தால் அங்கே ஸ்பின்னர்கள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள். அந்த வகையில் இந்திய அணியில் அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் குறைகள் இருக்கின்றன. மற்ற படி இது சமநிலை நிறைந்த அணியாகவே இருக்கிறது" என்று கூறினார்.