ஆயுள் தண்டனை போதாது... கோர்ட்டு முன்பு டாக்டர்கள் போராட்டம்
கொல்கத்தா,மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, ஆயுள் தண்டனை விதித்து சியல்டா கோர்ட்டு உத்தரவிட்டது.சஞ்சய் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவிட்டார்.இந்தநிலையில், பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை போதாது. இன்னும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சியல்டா கோர்ட்டு முன்பு இளநிலை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.