உலக சுகாதார மையத்தில் இருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா

  தினத்தந்தி
உலக சுகாதார மையத்தில் இருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா

வாஷிங்டன் டி.சி.,அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணியளவில் முறைப்படி டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் மற்றும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.மேலும் அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் நிறுத்தப்படும் என்றும் தனது உரையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். முன்னதாக அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாள உலக சுகாதார மையம் தவறிவிட்டதாக தனது தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தநிலையில் தற்போது விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது முதல் ஆட்சியின் இறுதியிலும் இதே உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை