அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

  தினத்தந்தி
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன் டி.சி.,அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார்.நவம்பர் மாதமே தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு ஜனாதிபதியின் பதவி காலமும் ஜனவரி 20-ந் தேதியில்தான் தொடங்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். இதற்காக, கார்கள் புடைசூழ வெள்ளை மாளிகைக்கு வந்தடைந்த டிரம்பை, ஜோ பைடன் கைகுலுக்கி வரவேற்றார். கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் நடைபெறும் என முன்பே தெரிவிக்கப்பட்டது. இது மிக பெரிய, வட்ட வடிவிலான அறையாகும்.இதன்படி, கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டிரம்ப் பதவியேற்பு விழாவானது, இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்றார். கடுமையான வானிலையால், கடந்த 1985-ம் ஆண்டு ரொனால்டு ரீகனும் இதேபோன்று மூடிய அறையில் பதவியேற்று கொண்டார்.பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். டிரம்புக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரையை ஆற்றுகிறார்.

மூலக்கதை