கார்கள் புடை சூழ டிரம்ப்... வியக்க வைக்கும் பதவியேற்பு விழா

  தினத்தந்தி
கார்கள் புடை சூழ டிரம்ப்... வியக்க வைக்கும் பதவியேற்பு விழா

வாஷிங்டன்,அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர்.இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானார்.நவம்பர் மாதமே தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் அமெரிக்க அரசியலமைப்பின்படி ஒவ்வொரு ஜனாதிபதியின் பதவி காலமும் ஜனவரி 20-ந் தேதியில்தான் தொடங்கும். அந்த வகையில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இந்தநிலையில், கார்கள் புடைசூழ வெள்ளை மாளிகை நோக்கி டிரம்ப் வந்தடைந்தார்.கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகை கட்டிடத்தின் உள்ளரங்கில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜூனியர், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 1861-ல் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் மற்றும் தனது தாய் மேரி அன்னே மேக்லியோட் பைபிள் மீது கை வைத்து டிரம்ப் பதவியேற்பார் என கூறப்படுகிறது. பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரை ஆற்றுவார். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவியேற்பார்.பதவியேற்பு விழாவில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். வியக்க வைக்கும் வகையில் டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் மாலை வாணவேடிக்கைகளுடன் தொடங்கின. தலைநகர் வாஷிங்டனில் இருந்து 48 கி.மீ. தொலைவில் விர்ஜினியாவில் உள்ள டிரம்ப் கோல்ப் மைதானத்தில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து அங்கு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.

மூலக்கதை