ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்., 5-ம் தேதி அரசு விடுமுறை
ஈரோடு,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேர்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்த சூழலில் நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். பின்னர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டிருந்தார். அதன்படி தி.மு.க., நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள், மாநிலத்தின் வேறு பகுதியில் பணி புரிந்தாலும் அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதியன்று நடைபெறுகிறது.