மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை
சென்னை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கோட்டூர்புரம் போலீசாரிடம் இருந்த கோப்புகளை பெற்று விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சிறையில் உள்ள ஞானசேகரனின் வீடு மற்றும் சம்பவம் நடந்த அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஞானசேகரன் சம்பவத்தன்று பயன்படுத்திய உடைமைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். மேலும் வீட்டு ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தினர். கைதான ஞானசேகரனிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், முக்கிய ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழு அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியன் முன் வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சிறையில் இருந்த ஞானசேகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். ஞானசேகரனிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். பின்னர் சிறப்பு புலனாய்வு குழு கோரிய 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ஞானசேகரனிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அழைத்து சென்றனர்.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக காவலில் எடுக்கப்பட்டுள்ள ஞானசேகரனிடம் விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றிரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின் இன்று அதிகாலையில் அண்ணா நகர் துணை ஆணையர் அலுவலகத்திற்கு ஞானசேகரன் அழைத்து செல்லப்பட்டார். அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வருகிறது.