சட்டவிரோதமாக வெட்டி பதுக்கப்பட்ட கற்கள்: கல்குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  தினத்தந்தி
சட்டவிரோதமாக வெட்டி பதுக்கப்பட்ட கற்கள்: கல்குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்

திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆவார். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார்.இந்த சூழலில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி ஜகபர் அலி புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் கனிம வள கொள்ளை தொடர்பாக மனு அளித்துள்ளார். சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து பல நூறு கோடிக்கான கனிம வள கொள்ளை நடந்துள்ளதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜகபர் அலி கடந்த 17-ந்தேதி அவரது கிராமம் அருகே பள்ளிவாசலுக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இறந்த ஜகபா் அலியின் மனைவி மரியம், திருமயம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், எங்கள் கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரி, கிரஷர்கள் குறித்து சென்னை ஐகோர்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து கனிம கொள்ளையை எனது கணவர் ஜகபா் அலி தடுத்து வந்தார். மேலும் அப்பகுதியில் மக்களை திரட்டி அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வந்தார். இதனால் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவர்கள், ஜகபர் அலி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். எனவே திட்டமிட்டு ஜகபர் அலி மீது லாரி ஏற்றி கொலை செய்துள்ளனர். எனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளது எனவும், சந்தேகப்படும்படியாக தனியார் கல்குவாரி உரிமையாளர் மற்றும் அவரது நெருங்கிய உறவினரான லாரி டிரைவர் மீது புகார் அளித்திருந்தார்.புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஜகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சூழலில் சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன், கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த சூழலில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பாக குவாரியில் டிரோன் மூலம் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள குவாரியில் 4 மாவட்டத்தை (திருச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை) சேர்ந்த கனிம வளத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் துளையானூரில் உள்ள கல் குவாரிகளில் சட்டவிரோதமாக வெட்டி கற்கள் பதுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக விற்பனை நடந்துள்ளதாகவும் கனிம வளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை