ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: வெறும் 2.5 ஓவர்களில் மலேசியாவை வீழ்த்திய இந்தியா

  தினத்தந்தி
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: வெறும் 2.5 ஓவர்களில் மலேசியாவை வீழ்த்திய இந்தியா

கோலாலம்பூர், ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று விளையாடியது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வெற்றி பெற்ற உத்வேகத்துடன் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மலேசிய அணியினர் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இந்தியா தரப்பில் 14-வது ஓவரை வீசிய வைஷ்னவி சர்மா அந்த ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். வெறும் 14.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மலேசியா 31 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக நுர் அலியா மற்றும் ஹுஸ்னா தலா 5 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் வைஷ்னவி சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து 32 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. வெறும் 2.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் அடித்த இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகள் கோங்கடி திரிஷா 27 ரன்களுடனும், கமலினி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வைஷ்னவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

மூலக்கதை