ஈரோடு: தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி தொழிலாளி பலி
ஈரோடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஓங்காலிபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் உள்ள அவரது அக்காள் லட்சுமியின் வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம் இவர் பாசூருக்கும், ஊஞ்சலூருக்கும் இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரெயிலில் அடிபட்டு மூர்த்தியின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும், ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.