மகா கும்பமேளா, இந்து தெய்வங்கள் குறித்து அவதூறு கருத்து: உ.பி.யில் 2 பேர் கைது

  தினத்தந்தி
மகா கும்பமேளா, இந்து தெய்வங்கள் குறித்து அவதூறு கருத்து: உ.பி.யில் 2 பேர் கைது

பாரபங்கி (உ.பி.):உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா குறித்தும் இந்து தெய்வங்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்து தெரிவித்தது தொடர்பாக பாரபங்கி மாவட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் பெயர் கம்ரான் ஆல்வி, மற்றொருவர் அபிஷேக் குமார். அவர்கள் பதிவு செய்த கருத்துகள் இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பாரபங்கி கோட்வாலி காவல் நிலைய அதிகாரி அலோக் மணி திரிபாதி கூறுகையில், "கம்ரான் ஆல்வி என்பவர் மகா கும்பமேளா தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இது சிலரது மனதை புண்படுத்தியது. உயர் அதிகாரிகள் அந்த வீடியோவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கம்ரான் ஆல்வி கைது செய்யப்பட்டார். மத உணர்வுகளை, மத நம்பிக்கைகளை அவமதிக்கும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்ரான் ஆல்வி தன்னை ஒரு பத்திரிகையாளராக பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு 9,000-க்கும் மேற்பட்ட பாலோவர்கள் உள்ளனர். அவர் ஒரு செய்தி இணையதளத்தையும் நடத்துகிறார். அவர் வெளியிட்ட வீடியோவை பரப்பியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான அபிஷேக் குமார், ஜெய்த்பூர் அருகே உள்ள போஜா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்து தெய்வங்கள் மற்றும் கும்பமேளா தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருப்பதாகவும் காவல் நிலைய அதிகாரி அமித் பிரதாப் சிங் கூறினார். இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றான மகா கும்பமேளா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. அடுத்தமாதம் 26-ம் தேதி வரை நடைபெறும். கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், ஆன்மிக பெரியோர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர்.

மூலக்கதை