சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து...பசுமை தீர்ப்பாய ஆணையை அரசு செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

  தினத்தந்தி
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து...பசுமை தீர்ப்பாய ஆணையை அரசு செயல்படுத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை,பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வால் பிறப்பிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்டத் தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.ஸ்ரீமாரியம்மாள் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 லட்சமும், மத்திய அரசின் சார்பில் ரூ.2 லட்சமும் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், இந்த விபத்து குறித்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த பசுமை தீர்ப்பாயம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அதே ஆண்டு ஜூன் மாதத்தில் தீர்ப்பளித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த திமுக அரசு, அத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டவாறு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.ஆனால், ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை தாமதப்படுத்தி வருகிறது தமிழக அரசு. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு மனிதநேயமின்றி செயல்படக்கூடாது. அந்த விபத்தில் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த நந்தினி என்ற 15 வயது சிறுமி எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். குடும்பத்தின் ஒற்றை வாழ்வாதாரமாக விளங்கிய தந்தையை இழந்து பல குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல் தமிழக அரசு செயல்படக்கூடாது.தேவையற்ற திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, 27 குடும்பங்களில் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டவாறு இழப்பீட்டை, கடந்த நான்கு ஆண்டுகளுக்கான வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்படும் சூழலில், அங்கு தீக்காயங்கள் மற்றும் வெடிமருந்து விபத்து காயங்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை உடனடியாக அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை