சபரிமலையில் டோலி சேவை ரத்து - மந்திரி வாசவன் தகவல்
திருவனந்தபுரம், சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சிறப்பாக செயலாற்றிய காவல் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாநில டி.ஜி.பி. உள்பட 118 பேருக்கு மந்திரி வாசவன் விருதுகளை வழங்கினார். விழாவில் மந்திரி வீணா ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மந்திரி வாசவன் நிருபர்களிடம் கூறியதாவது:-இந்த சீசனில், 53 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 10 லட்சம் அதிகமாகும். உடனடி தரிசன முன்பதிவு செய்து 10 லட்சத்து 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். நடப்பு சீசனில் சபரிமலை நடை வருமனம் ரூ.440 கோடியாகும். இது கடந்த சீசனை விட ரூ.80 கோடி அதிகம். சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரையில் அமைக்கப்படும் 'ரோப் வே' திட்ட கட்டுமான பணிகள் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. ரூ.250 கோடியிலான இந்த திட்டம் 1½ ஆண்டுகளில் முடிக்கப்படும். 'ரோப் வே' சரக்குகளை கொண்டு வரவும், வயதான, நோய்வாய்பட்ட பக்தர்களை அழைத்து வரவும் இந்த திட்டம் பயன்படுத்தப்படும். மேலும், சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்களை சுமந்து செல்லும் டோலி சேவை ரத்து செய்யப்படும். இதில் வாழ்வாதாரம் இழக்கும் டோலி தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.