கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி,தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தது தொடர்பாக கவர்னருக்கு எதிராக அரசு சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, வில்சன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் குறுக்கீடு செய்வதாக கூடுதல் மனுவை தாக்கல் செய்த அவர்கள், அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.அதை கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமனத்திலும், சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்திலும் கடந்த ஆண்டு நிலையே தொடர்கிறதா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கவர்னர் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அதே நிலை தொடர்கிறது என்றும் தெரிவித்தனர். அப்போது கவர்னர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக கூறினர். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், கவர்னர் விவகாரத்தில் பழைய நிலைதான் தொடருகிறதா? முடிவு எட்டப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை ஒருவாரத்துக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஒரு தீர்வைக் காண வேண்டும். அப்படி தீர்வு ஏற்படாத நிலையில் நாங்களே இந்த பிரச்சனைக்கு தீர்வை முன்வைப்போம் என தெரிவித்தனர். இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக தமிழ்நாடு அரசின், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 4-ம் தேதி இறுதி விசாரணை நடந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.