தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார் - எடப்பாடி பழனிசாமி

  தினத்தந்தி
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்  எடப்பாடி பழனிசாமி

சென்னை,அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதல்-அமைச்சரும், நிதி அமைச்சரும், அவர்களுக்கு ஏவல் புரியும் பல கட்சி தாவிய செந்தில் பாலாஜியும், என்மீது தேவையற்ற வன்மத்தைக் கக்குகிறார்கள். இதிலிருந்து, மக்கள் பணியில் நான் சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்பதை உணர்கிறேன். திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் பேசியதாகவும், அது வெட்டிப் பேச்சு' என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனறு நான் பேசினால், அது வெட்டிப் பேச்சாம். 2021 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத சுமார் 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றது யார்? அவற்றில் சுமார் 53 வாக்குறுதிகள், மத்திய அரசை வலியுறுத்தி முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்று குறிப்பிட்டது யார்? ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் ஆகியும் தமிழக மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் மற்றும் பணப் பயன் அளிக்கக்கூடிய கீழ்க்கண்ட ஒருசில முக்கிய வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வு ரத்து; குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை; பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும்; தமிழக மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் ரத்து; 100 நாள் ஊரக வேலை நாட்கள் 150-ஆக அதிகரிக்கப்படும்; எரிவாயு சிலிண்டர் ரூ. 100 மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு; பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம்; அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை; நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம்; அரசு பொதுத்துறை நிறுவனங்கள் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்; மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்; முதியோர் உதவித் தொகை 1500 ஆக உயர்த்தப்படும், பாலியல் கொடுமை – பாதிக்கப்பட்டோர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்; தனிப் பிரிவுகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்... என்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போதும், பல்வேறு இடங்களில் பேசும்போதும், திமுக-வின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும்மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று பேசிய ஸ்டாலின், நேற்று சிவகங்கையில் பேசும்போது, திமுக-வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்றும், இன்னும் 116 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் ஸ்டாலினின் பொய்முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. நாங்கள், 90 சதவீதத்திற்கும் மேல் எங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். ஒருசில அறிவிப்புகள், ஒன்றரை ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணங்களால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது திமுக-தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. அம்மாவின் அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டனவா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டாலே தெரிந்துவிடும். கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில், விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசு ஸ்டாலின் மாடல் அரசு. விலைவாசியைக் குறைக்க எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டுவரவில்லை. மூன்று முறை மின்கட்டண உயர்வு. ஏற்கெனவே இருமடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, இனி ஆண்டுதோறும் 6 சதவீத உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு. தொழில் வரி உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்று மக்களின்மேல் அதிக சுமையை சுமத்தி வருவதுதான் ஸ்டாலின் மாடல் அரசு.சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கள்ளச் சாராயம், மணல் கடத்தல், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழ் நாடு உருவானதற்குக் காரணமான இந்த கையாலாகாத ஆட்சியில், தமிழக மக்கள் படும் சிரமங்களை சிறிதும் கவலைப்படாமல், அவற்றையெல்லாம் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படும் மக்கள் விரோத திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இனியாவது நிதி நிலைமைப் பற்றியும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளைப் பற்றியும் நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை