மும்பையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை,கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள் உள்பட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி-ஓஷிவாரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அந்த பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தற்போது வரை சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்றார்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனக் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.