திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை

  தினத்தந்தி
திருச்சியில் ஆதியோகி ரத யாத்திரை

ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா, பிப்ரவரி 26-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்படுகிறது.தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த ரத யாத்திரை நாளை வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆதியோகி ரதம் வலம் வர உள்ளது. இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று ஆதியோகியை தரிசனம் செய்கின்றனர். விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை ஆதியோகிக்கு அர்ப்பணிக்கலாம்.இதனுடன் 'சிவ யாத்திரை' எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மைசூரு, சென்னை, நாகர்கோவில், கோவை, பொள்ளாச்சி மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 மரத்திலான தேர்களை இழுத்தபடி பக்தர்கள் பாத யாத்திரையாக வருகின்றனர். சென்னையிலிருந்து ஆதியோகி தேருடன் 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளோடு கூடிய மற்றொரு தேரும் கோவை நோக்கி பயணிக்க உள்ளது. அதே போல மற்ற 5 திருத்தேர்களிலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் திருவுருவச் சிலைகளும் இடம் பெற்று உள்ளன.

மூலக்கதை