டிரம்ப் அறிவிப்பு எதிரொலி; நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைப்பு

  தினத்தந்தி
டிரம்ப் அறிவிப்பு எதிரொலி; நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைப்பு

மெக்சிகோ சிட்டி,அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார். அதில் குறிப்பாக அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்படி அமெரிக்காவிற்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்போவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவோரை தங்கவைக்க மெக்சிகோ-அமெரிக்கா எல்லை அருகே அமைந்துள்ள டிஜுவானா, ரெய்னோசா, மடாமரோஸ், எல் புன்ட்டோ உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 5 நாட்களில் இந்த கூடாரங்களில் உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாடு திரும்பும் மெக்சிகோ மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மூலக்கதை