யமுனை நதி நீரை குடிப்பதுபோல் அரியானா முதல்-மந்திரி நாடகம் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடெல்லி,பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்படுவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறினார்.இதற்கு பிரதமர் மோடி, அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு பதில் அளிக்கும் விதமாக டெல்லியின் பல்லா கிராமத்தில் உள்ள யமுனை நதிக்கரைக்கு வந்த அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, நதியிலிருந்து ஒரு கை தண்ணீர் எடுத்து குடித்தார். பின்பு பேசிய அவர் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது. அரசியல் "ஆதாயங்களுக்காக மக்களின் மனதில் பயத்தை உருவாக்குகிறார்" என்றும் சாடியிருந்தார்.இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலை ஏற்றுக்கொள்வது போல் நடித்த அரியானா முதல்-மந்திரி நாடகம் ஆடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா காக்கர் கூறுகையில், "யமுனை நதியில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடிப்பது போல அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி ஒரு நாடகம் நிகழ்த்தியதைப் பார்த்தோம். அவர் தண்ணீரைக் குடிக்கவில்லை. நீரை வாயில் வைத்ததும் அதனைத் துப்பிவிட்டார். இதுபோன்ற நாடகங்கள் மூலம் மக்களை திசை திருப்புவதை விட, யமுனை எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதை அவர் தெரிவிக்கவேண்டும்" என்றார்.