டெல்லி சட்டசபை தேர்தல்: சோதனையில் ரூ.194 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்
புதுடெல்லி,டெல்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.,8ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடைமுறைக்கு வந்தன. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் கூறுகையில், "சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், ரூ.194 கோடி மதிப்புள்ள ரொக்கம், மது பாட்டில்கள், இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரைக்கும் 6 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதன் மீது சராசரியாக 36 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சி-விஜில் செயலி மூலம் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அமலாக்கத்துறை அதிகாரிகள் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.